SRI LANKA


 

ஒன்றுபடுவோம்! (கவிதை)


முதல் மனிதன் கால் பதித்த
புண்ணிய பூமி இது.

உலகின் கண்கள் வியந்து பார்த்த
வித்துவ தீபமிது.

இந்து சமுத்திரத்தில் மிதந் திருக்கும்
அழகிய முத்து இது.

ஆசியா கண்டத்தில் அழகாய் மின்னும் 
அபூர்வ நட்சத்திரம் இது.

இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற
இரத்தின தீபமிது.

பொக்கிஷங்கள் புதைந்திருக்கும் 
பெறுமதி மிக்க 
இந்த மண்ணில்....

இயற்கை அழகும் வளங்களும்
கொழித்து விளைந்த 
இந்த மண்ணில்....

இரத்தினக் கற்கள் விதைந்திருக்கும்
விலைமதிப்பு மிக்க 
இந்த மண்ணில்....

சிறப்பு மிக்க மனிதர்களெல்லாம்
வாழ்ந்து மறைந்த
இந்த மண்ணில்....

இரத்தக் கறைகள் படிந்து
அழுக்காகிப் போனதே...!

இனியும் வேண்டாம் இன வெறி.
இனியும் வேண்டாம் வேற்றுமை.

நாம் பெற்ற சுதந்திரத்தை
நாமே தொலைத்தோம்.

நாம் பெற்ற நிம்மதியை
நாமே தொலைத்தோம்.

நாடு போற்றும் தலைவர்கள் பலரையும்
நாமே தொலைத்தோம். 

உணர்வற்ற மனிதர்களால்
உறவுகளையும் இழந்தோம்.

இனியும் வேண்டாம் இன வெறி.
இனியும் வேண்டாம் வேற்றுமை.

இந்த அழகான தேசத்தை நேசிக்கும் 
இலங்கையராய் நாம் வாழ்வோம்.

"மதம்" பிடிக்காமல் மனிதம் மீறாமல்
மனித உரிமைகளை நாம் மதிப்போம்.

அவரவர் மதங்களை இடையூறின்றி 
அனுஷ்டித்து தினம் நாம் மகிழ்வோம்.

அழுக்குகள் படிந்த அரசியலையும்
அடியோடு நாம் துடைத் தெறிவோம்.

அடக்கி யாளும் ஆட்சியாளர்களின்
அடிமைகளாய் நாம் ஆகாதிருப்போம்.

கருத்து பேதங்களுடன் 
கசப்பான எண்ணங்களையும்
கண்ணியமாய் 
நாம் கலைந் தெறிவோம்.

சிறுபான்மை என்றும்
பெரும்பான்மை என்றும்
வேற்றுமை பேசாமல் 
நாம் வாழப் பழகுவோம்.

இனங்களால் வேறு பட்டாலும்
குணங்களால் நாம் ஒன்று படுவோம்.

மதங்களால் வேறுபட்டாலும்
மனங்களால் நாம் ஒன்றுபடுவோம்.

ஆசியாவின் அற்புத தேசத்தை 
உருவாக்க நாம் புறப்படுவோம்.

உலக அதிசய தேசத்தை 
கட்டியெழுப்ப நாம் ஒன்றுபடுவோம்.

மனிதம் நிறைந்த மனிதர்கள் வாழும்
அழகான தேசமாய் 
எம் தாய் மண்ணை  நாம் மீட்டெடுப்போம்.




Post a Comment

0 Comments